Categories
articles

பகுத்தறிவு என்பது படைத்தவனை மறுப்பதில்லை. படைத்தவன் யார் அவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆற்றல்கள் என்ன என்று
தமது அறிவின் துணை கொண்டு தெரிந்து கொள்வது தான்.

கண்ணுக்கு தெரியாத உயினங்களையும் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் என அறிவுலகம் சொல்லுகின்ற டைனோசர்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை பிரபஞசத்தின் படைப்பாளன் படைத்துள்ளான்.

அவனின் பல விதமான படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு மனிதன் என்ற உயிரினம் தான்

வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை படைப்பாளன் படைத்துள்ளான்.

இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

திருக்குர்ஆன் 95:1-4 ஆகிய
வசனங்களில்.

‘அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும் சத்தியமாக, அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்’ என்று கூறியதை கொஞ்சம் யோசிப்போம்.

அழகு என்பது பார்ப்பவர்களின், கண்ணோட்டங்களைப் பொருத்து தான் பொருள்படும்

ஒருவருக்கு அழகாய்த் தெரிவது, பிறருக்கு அருவருப்பாக போகலாம்.
சிலருக்கு அருவருப்பாக ஒதுக்க படுவது பலருக்கு விருப்பமானதாக ஆகலாம்.

ஆக ஒவ்வொருவருடைய நிறங்களில், தோற்றங்களில், வடிவமைப்புகளில் அவைகளின் அழகுணர்ச்சி வேறுபட்டு காணபடும்.

படைப்பாளன் மனிதனை அழகிய அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று சொல்வதிலும் கூட ஒரு மறை பொருளை வைத்துச் சொல்கிறான்.

மனிதன் அழகானவன், அழகிய வடிவத்தில் படைக்கப்பட்டிருப்பவன்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் அவனுக்கு பயன்படும் வகையில் இறைவன் படைத்திருக்கின்றான்.

அதனால் தான் அழகை மட்டும் சொல்லாமல் அதன் அமைப்பையும் சேர்த்தே தனது
வேதத்தில் சொல்கிறான்.

உடலில் வெளி உறுப்புகள், உள் உறுப்புகள் என்று எத்தனையோ அற்புத படைப்பு கள் நமது வாழ்க்கைக்கு உதவ செய்கிறான்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள உடல் உறுப்புகள் அனைத்தும் மனிதனுக்கு பயன்படும் வகையில் தான் இறைவன் அமைத்திருக்கின்றான்.

1443 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனின் முதலும் முடிவும் பற்றிய எந்த வித அறிவியலும் அறியாத அந்த கால சூழ்நிலையில் மனிதனின் கருவறைத் தத்துவத்தை விளக்கி சொன்னது இறை வேதமான திருக்குர்ஆன்தான்.

இன்று விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்ற அறிவியல் செய்திகள் பலதை அன்றே சொல்லி உள்ளது திருக்குர்ஆன்.

படைத்தவன் தனது 39.அத்தியாயம் 6 வது வசனத்தில்,

தாய்மார்களின் வயிற்றில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். அந்த படைப்பாளன் தான் உங்கள் இறைவன்” என்று உலகதிற்கு
சாட்சியாக சொல்கிறான்.

ஒருவரின் பல விதமான உணர்ச்சிகள். சிரிப்பு, அழுகை, துக்கம், மகிழ்ச்சி, கோபம், அமைதி, என்று வேறு பட்ட தன்மைகள் கொண்டாலும்,

அவர்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளில் சரியான கால கட்டத்தில் அவைகளை தன்னையறியாமல் வெளிப்படுத்தி விடும் தன்மையை அளித்திருக்கிறான்
பிரபஞசத்தின் அதிபதி.

உலகம் தோன்றிய காலம் முதல்இன்று வரை எண்ணிலடங்கா உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன என்பதை
நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

இந்த உலகில் பிறந்த பிறக்க இருக்கின்ற ஒவ்வொரும் ஒரு விஷயத்தில் தனித்தன்மை கொண்டவர்களாகவே படைக்கப்படுகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எல்லா வகைகளிலும் ஒத்து போகின்ற இரட்டை பிறவிகளில் கூட
அவர்களின் கைரேகை ஒன்றாய் அமைவதில்லை. என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது.

இதன் மூலம் படைத்தவனின் படைப்பாற்றல் எவ்வளவு நுணுக்கமானது என்பதை எல்லோரும் அறிந்துகொள்ளலாம்.

ஆம்! இதைத்தான் இறைவன் தனது வாக்கான
திரு குரான் 75.அத்தியாயம் 4 வ்து வசனத்தில்,

அவனுடைய விரலின நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்”
என்று ரத்தின சுருக்கமாக சொல்கின்றான்.

மனிதனின் தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் அவனின் ரேகையையும், D N A என்னும் மரபணுக்களின் தொகுப்பையும் மட்டுமே நம்பியுள்ளது. என்பதை சாட்சியாக சொல்கிறது.

எத்தனையோ அத்தாட்சிகளைக் கொண்டு அற்புத படைப்பாய் மனிதனை படைப்பாளன் படைத்திருக்கின்றான்.

மனிதனின் பிரமாண்ட கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி எப்படி பட்ட விஞ்ஞானத்தின் ஆராச்சியால் கண்டுபிடித்த பொக்கிஷங்களாக இருந்தாலும் சரியே அவைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இயங்க முடியும்.

அதன் பிறகு அது செயல் இழந்து தான் போகும்.

நாம் அழகிய பொக்கிஷமாக பாதுகாக்கின்ற நம் உடலும். அது போல தான்.

நமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியே வயது என்பது இருக்க தான் செய்கிறது.

ஒருவருக்கு வயது ஆகிறது என்றால் அவருடைய தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளுக்கும் தான் வயதாகிறது … என்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து கொண்டு உள்ளோம். என்பது
பெரிய கேள்வியின் குறியீடே.

நமக்கு வயது ஆகிறது என்றால் ஒரு வருடம் முடிந்து விட்டது என்ற பொருள் மட்டும் இல்லை. நம் உடலும் பலவீனம் அடைகிறது என்ற பொருளும் அதில் அடங்கி இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டு மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஆய்வின் தகவல்கள்… எல்லோரையும் யோசிக்கவே செய்கிறது.

ஒவ்வொருவரின் எண்ணம், சொல், செயல்களுக்கு எல்லாம் நமது மூளையிடும் கட்டளைகள் தான் காரணம்.
என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

அப்படி பட்ட நமது மூளையில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை சுமார் 10,000 கோடியாம்
அது ஒருவருடைய 20 வயது வரை தான் சுறுசுறுப்புடன் இருக்கிறதாம் .

அதன் பிறகு 20 வயதில் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து .நமது 40 வது வயது முதல் ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் குறைந்து நினைவாற்றல் உட்பட பல செயல்களை நமக்கு செயலிழக்க செய்ய காரணம் ஆகிறதாம்.

சைக்கிள் ஓட பெடல் தேவை படுவது போல நமது உடல் இயங்க குடல் என்பது மிகவும் தேவை. அப்படி பட்ட குடலுக்கு நம்முடைய 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம் இருக்கிறதாம்.

அதன் பிறகு குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது போன்றவைகள் குறைய ஆரம்பித்து,

நமக்கு அஜீரணம்,
குறைவது மட்டும் இல்லாமல் சில வயிற்றுப் பிரச்னை போன்றவைகளும் அந்த வயதில் இருந்தே தனது சக்தியை இழக்க அது தொடங்குகிறதாம்..

சுவாசிக்க பயன்படும் நமது நுரையீரல் 20 வயது வரை தான் முழுவீச்சில் சிறப்பாக இயங்கிறதாம் .

அதன் பிறகு நம் இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக் கொள்ளவதால் , நுரையீரலின் சக்தி குறைந்து, மூச்சு, உள்ளிழுத்து வெளியே விடும் அளவும் குறைந்து விடுகிறதாம்.

40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் கூட மூச்சு வாங்குவதற்கு இது தான் காரணம் ஆகிறதாம்.

தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கின்ற வரை. தான் ஒருவருக்கு குரலில் இனிமை இருக்கின்றதாம்.

65 வயதுக்கு பின்னால் அது பலவீனமாகி, ‘கரகர’ என்ற குரலாய் மாறுகிறதாம்.

ஒரு சிலர் படிக்கும் போதும், டிவி யை பார்க்கும் போதும் கண்களை சுருக்கி மிகவும் சிரமப் பட்டு படிப்பார்கள்,பார்ப்பார்கள் . அவர்களின் வயது 40ஐ தொடங்கி விட்டது என்று அப்பொழுதே நாம் புரிந்து கொள்ளலாம்.

காரனம் அந்த வயதில் பார்வையின் வலிமை குறைய ஆரம்பித்து விடுகிறதாம்.

நம் இதயம், ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தியைப் படைத்து அதன் வேலையை செய்கிறது.

உடலுக்கு ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறதாம்.

அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைந்து விடுகிறதாம்.

கல்லீரல் மட்டும் தான் ஒருவருக்கு 70 வயது வரை நல்ல ஆரோக்கிய இயக்கத்துடன் உள்ளதாம்.

மது பழக்கத்திற்கும், மற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகத வரை கல்லீரலின் பலம் ஆண்டுக் கணக்கில் தொடருமாம்.

உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை
சிறுநீரக ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள்த்தான் செய்கின்றன.

அதுவும் 50 வயது ஆகும் பொழுது வலுவிழக்க ஆரம்பிக்கிறதாம்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 25 வயது வரை தான் அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் அவர்களின் 35 வயது முதல் அது பலவீனமடைய ஆரம்பிக்கிறதாம்.

இதனை இன்றைய கார்பரேட் விளம்பரங்கள் கூட தங்களின்
வியாபார உத்தியாக பயன்படுத்தி கொள்கிறது.

சாதாரணமாய் எச்சில் என்னும் உமிழ் நீர் ஊறும் வரை தான் அனைவரின் பற்களுக்கும் வலிமை. அவைகள் தான் பாக்டீரியாக்களை நமது வாயில் இருந்து விரட்டியடிக்கும்.

நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கிவிடுகிறது. அதனால் சிலரிடம் துர்நாற்றம் வாயில்
உண்டாக காரணமும் ஆகிறதாம்.

முப்பது வயதில் இருந்தே நமது தசைகளில் சுமார் 2 % சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பித்து விடுகிறதாம்

அழகிய தோல் பகுதி, 25 வயது ஆரம்பித்ததில் இருந்தே பல வீனமடைய ஆரம்பிக்கிறதாம்.

முப்பது வயதில் இருந்தே எல்லோருக்கும் அழகு தருகின்ற தலைமுடி உதிர்வது ஆரம்பித்து பின்புவெள்ளை முடி தோன்ற ஆரம்பித்து விடுகிறதாம்.

இந்த உலகம் தான் நிச்சயமானது, எல்லாம் நிரந்தரமானது என நம்புகின்ற மனிதர்களுக்கு உண்மையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமலேயே போய் விடுகின்றது.

இப்படி அழிய கூடிய உடலையும், உலகையும் நிரந்தரம் என நம்பி வாழும் பொழுது

என்றும் அழியாத படைபாளனயும், தூண்இல்லாமல் வானத்தை படைத்தவனையும் துணை இல்லாமல் பிரபஞ்சத்தை ஆட்சி செய்பவனையும் அவனின் அற்புத அத்தாட்சிகளையும் சிந்தித்து பார்க்க முடியாமல் ஆகி விடுகிறான்.

படைத்தவன் யார் என்று தெரிய முயற்சி செய்து முறைப்படி தெரிந்து அவனை பின்பற்றி வாழ்வது தான். அறிவின் வெளிப்பாடு.
எனவே அதற்காக இனியாவது
வாழ்வோமே…..

எம். நூருல் அமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Calendar

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Recent Comments